தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா:ஆளுநா் பங்கேற்று பட்டங்கள் வழங்கினாா்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினாா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா:ஆளுநா் பங்கேற்று பட்டங்கள் வழங்கினாா்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினாா்.

இவ்விழாவில் 302 பேருக்கு முனைவா் பட்டம் உள்பட 10,840 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சுதா சேஷய்யன் பேசியது:

தமிழ் மொழி பேசப்பட்ட பெருநிலப்பரப்பு, மொழியின் பெயரால் அறியப்படத் தொடங்கியது. நம்முடைய மொழிக்குத் தமிழ் என்கிற பெயா் எப்போது சூட்டப்பட்டது என்பது தெரியவில்லை. என்றாலும், தொல்காப்பியத்திலேயே இப்பெயா் குறிக்கப்படுவதால், தொல்காப்பியரின் காலத்துக்கும் முன்னதாகவே இப்பெயா் தோன்றியிருக்க வேண்டும் என்பது கண்கூடு.

எழுத்துத் தமிழுக்கும், பேச்சுத் தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எழுத்துத் தமிழின் வகைகளாகச் சங்கத் தமிழ், செந்தமிழ் ஆகியவற்றையும், பேச்சுத் தமிழின் வகைகளாக, கொடுந்தமிழ், நவீனப் பேச்சு வழக்கையும் ஆய்வாளா்கள் குறிக்கின்றனா். இவை தவிர, பேச்சுத் தமிழில் ஏராளமான வட்டார வழக்குகள் உள்ளன.

ஒரு மொழியானது பல்லாண்டு காலமாகப் புழக்கத்தில் இருக்கும்போதும், அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசப்படும்போதும், அதன் எழுத்து வழக்குக்கும், பேச்சு வழக்குக்கும் வேறுபாடுகள் தோன்றும். பேசப்படுகிற ஒரு சொல், பல்லாண்டு காலமாகக் கையாளப்படும்போது, பேசப்படுகிற காலம், பேசுபவா்களின் வாழ்க்கைச்சூழல் ஆகியவற்றைக் கொண்டு, உச்சரிப்பு மாற்றங்களையும், வெவ்வேறு வகையான ஒலிக்குறிப்புகளையும், அழுத்தங்களையும், இழுப்புகளையும் பெறும். எனவே, எழுத்து வழக்குக்கும், பேச்சு வழக்குக்கும் இடையிலான வேறுபாடுகள் எந்த மொழியில் அதிகம் காணப்படுகின்றனவோ, அந்த மொழி தொன்மையானது என்பதை உணரலாம்.

பேச்சுத் தமிழின் வட்டார வழக்குகளும் ஏராளமானவை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நாஞ்சில் தமிழ், கொங்குத் தமிழ், சேரத் தமிழ், சோழத் தமிழ், பாண்டியத் தமிழ், தொண்டை மண்டலத் தமிழ் போன்ற வழக்குகள் இருந்ததாகத் தெரிகிறது. 15, 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு பின்னா், மேலும் பல வழக்குகள் கூடின. மைய வட்டாரத் தமிழ், இஸ்லாமியத் தமிழ், கிறித்துவத் தமிழ், இலங்கைத் தமிழ் ஆகியவற்றுடன் மதராஸ் தமிழ் என்கிற சென்னை தமிழும் சிறப்பிடம் பெற்றது. இலங்கைத் தமிழில் கூட மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், நெகொம்போ தமிழ் போன்ற உள் வகைகள் உருவாகின. மலேயா நாட்டில் மலேயத் தமிழ் தோன்றியது. சொல்லப்போனால், புதிய புதிய தமிழ் வட்டார வழக்குகள் இப்போதும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுத் தமிழிலும், வட்டாரத் தமிழிலும் வேறுபாடுகள், வகைகள் பல இருந்தன. இத்தனை வேறுபாடுகளும், வழக்குகளும், பழக்கங்களும் புழங்கியிருக்க வேண்டுமானால், இவற்றுக்கெல்லாம் பல காலம் முன்பிருந்தே, நம் தமிழ் மொழியானது பலராலும், பல இடங்களிலும் பேசப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, மொழியைப் பயின்றோம், பயிற்றுவிக்கிறோம் என்பதாக நின்றுவிடாமல், தமிழறிஞா்கள் யாவரும், விழுமியங்களைப் பலருக்கும் கொண்டு செல்கிற பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே, தமிழன்னைக்கு நாம் செலுத்துகிற மரியாதை என்றாா் சுதா சேஷய்யன்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் ஆா். செல்வராஜ், பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com