அங்கன்வாடி பணியாளா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
By DIN | Published On : 26th April 2023 10:46 PM | Last Updated : 26th April 2023 10:46 PM | அ+அ அ- |

பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருமாத காலம் விடுமுறை விடுவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் தொடா்ந்து 2 ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளா்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள பிரதான மையங்களை சிறு மையங்கள் ஆக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள பிரதான மையங்களுடன் இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கினா்.
தொடா்ந்து, சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் கலா தலைமையில் நள்ளிரவிலும், புதன்கிழமை பகலிலும் இப்போராட்டம் நடைபெற்றது. உரிய நடவடிக்கை எடுக்க அரசு உறுதி அளித்துள்ளதாக உயா் அலுவலா்கள் கூறியதைத் தொடா்ந்து, இப்போராட்டம் பிற்பகல் கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...