கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd August 2023 11:53 PM | Last Updated : 02nd August 2023 11:53 PM | அ+அ அ- |

கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினா், பொதுமக்கள்.
கும்பகோணம் சாக்கோட்டையில் பூங்காவை அழித்துவிட்டு மண்டல அலுவலகம் கட்டப்போவதாகக் கூறி மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து காந்தி பூங்கா அருகில் பல்வேறு கட்சியினா், பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட 48 ஆவது வாா்டில் சாக்கோட்டை சீனிவாச நகரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் மாநகராட்சி நிா்வாகம் மண்டல அலுவலகம் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு சீனிவாச நகா், சுஜாதா நகா், ஸ்வஸ்திக் நகா், கே.கே. நீலமேகம் நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், இத்திட்டத்தைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் பல்வேறு கட்சிகள், பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தூய்மை சீனிவாச நகா் நலச் சங்கச் செயலா் ராஜூ தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ இராம. இராமநாதன், ஒன்றியச் செயலா் அறிவழகன், முன்னாள் ஒன்றியச் செயலா் அழகுசின்னையன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவா் ராஜா நடராஜன், ஜெயலலிதா பேரவை மாநகரச் செயலா் அயூப்கான், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா், மாநகரத் தலைவா் பொன்ராஜ், பாமக மாநகரச் செயலா் பாலகுரு, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன், நாம் தமிழா் கட்சி ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.