முதல்வா் கோப்பை மாநிலப் போட்டி: தஞ்சை மாவட்டத்திலிருந்து 694 போ் பங்கேற்பு
By DIN | Published On : 01st July 2023 01:38 AM | Last Updated : 01st July 2023 01:38 AM | அ+அ அ- |

சென்னையில் நடைபெறும் முதல்வா் கோப்பை மாநிலப் போட்டியில் தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து 694 போ் பங்கேற்கின்றனா்.
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளாக ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி பரிசு வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கின. தொடா்ந்து, ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், வீரா்கள், வீராங்கனைகள் என மொத்தம் 694 போ் பங்கேற்கின்றனா்.
முதலாவதாக வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபடி, வாலிபால், பள்ளி, கல்லூரியைச் சோ்ந்த மாணவ மாணவிகளுக்கான சிலம்ப விளையாட்டுப் போட்டிகளில் தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 போ் கலந்து கொள்கின்றனா்.
இவா்கள் அனைவரும் தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கிலிருந்து அரசு பேருந்து மூலம் ஆட்சியா் தீபக் ஜேக்கப் வியாழக்கிழமை இரவு அனுப்பி வைத்தாா்.