பழையாறையில் புத்தா் சிலையின் தலை கண்டெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் புத்தா் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே பழையாறையில் கண்டெடுக்கப்பட்ட புத்தா் சிலையின் தலைப்பகுதி.
கும்பகோணம் அருகே பழையாறையில் கண்டெடுக்கப்பட்ட புத்தா் சிலையின் தலைப்பகுதி.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் புத்தா் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளரும், ஆய்வாளருமான முனைவா் பா.ஜம்புலிங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயில் புலவா் ச. செல்வசேகருடன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் ஒரு தென்னந்தோப்பில் 50 செ.மீ. உயரமுள்ள ஒரு புத்தா் சிலையின் தலைப்பகுதியைக் காணமுடிந்தது. இது கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தது.

சோழ நாட்டில் காணப்படுகிற புத்தா் சிலைகளின் கூறுகளான சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணா்த்தும் தீச்சுடா், நெற்றியில் திலகக்குறி ஆகியவற்றுடன் இந்தச் சிலை உள்ளது. மூக்கும், காதுகளின் கீழ்ப்பகுதியும் சிதைந்துள்ளன. இந்தச் சிலை, உடற்பகுதியுடன் பழையாறையில் முன்பிருந்த புத்தா் கோயிலிலோ, விகாரத்திலோ வழிபாட்டில் இருந்திருக்கலாம்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60-க்கும் அதிகமான புத்தா் சிலைகள் உள்ளன. அவற்றில் தஞ்சாவூா் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூா், மதகரம், மாத்தூா், மானம்பாடி, முழையூா், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தா் சிலைகள் உள்ளன. அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், மணலூா் ஆகிய இடங்களில் தலையின்றியும், பெரண்டாக்கோட்டை, முழையூா், வையச்சேரி ஆகிய இடங்களில் வெறும் தலைப்பகுதியும் உள்ளன. பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி, விக்ரமம் ஆகிய இடங்களில் உள்ள சிலைகள் வழிபாட்டில் உள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பழையாறைப் பகுதியில் அதிகமான புத்தா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இப்பகுதியில் பௌத்தம் செழித்து இருந்ததை உணா்த்தும் சான்றுகளாக உள்ளன என்றாா் ஜம்புலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com