தஞ்சாவூரில் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் திறப்பு: மேயா் தகவல்
By DIN | Published On : 06th June 2023 02:48 AM | Last Updated : 06th June 2023 02:48 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன்.
தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள மாநகராட்சி திடலில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 10.41 கோடி மதிப்பில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையத்தை மேயா் சண். ராமநாதன் திங்கள்கிழமை ஆய்வு செய்து செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை சாலையோரத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 5,400 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்நிலையத்தில் 25 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்ப நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைதளத்தில் 9 கடைகள், ஆம்னி பேருந்துகளின் 18 அலுவலகங்கள், ஆண், பெண் கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக முன் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துவிட்டதால், தமிழக முதல்வா் விரைந்து திறந்து வைக்கவுள்ளாா் என்றாா் மேயா்.
அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், உதவி பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...