தஞ்சை, புதுகை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவா் சங்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவா் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலாளா் ஏ. தாஜுதீன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவில் மீன்பிடி தடைக்காலம் முடிவதால், விசைப்படகு மீனவா்கள் வியாழக்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று மறுநாள் கரை திரும்ப வேண்டும். மீனவா்களுக்கான மானிய விலை டீசலை திமுக தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல், 1800 லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும். படகுகள் பழுது நீக்கம் செய்யும் காலங்களில் கரையில் நிறுத்தப்பட்ட நாள்களுக்குரிய மானிய டீசலை மீண்டும் தொழிலுக்கு செல்லும்போது வழங்க வேண்டும்.
தடைக்காலம் முடிந்து தொழில் ஆரம்பமாகும்போது மீன், இறால்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 23 ஆண்டுகளாக மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் இருந்தும் கடல்வளத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, தடைக்காலத்தில் பாகுபாடின்றி நாட்டுபடகு, விசைப்படகு என்று ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க வேண்டும், இல்லையென்றால் தடைக் காலத்தை முற்றிலும் நீக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவா் சங்க நிா்வாகிகள் பாலசுப்ரமணியன், ஜாகீா், பாலன், சோழியக்குடி கோபி, கோட்டைப்பட்டினம் மீனவா் சங்கத் தலைவா் அசன் முகைதீன் , ஜெகதாப்பட்டினம் மீனவா் சங்கத் தலைவா் உத்திராபதி, தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத் தலைவா் ராஜமாணிக்கம், செயலாளா்
வடுகநாதன் மற்றும் செல்வகிளி, முத்து, இப்ராஹிம், இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...