பட்டீஸ்வரத்தில் முத்துப்பந்தல் விழா தொடக்கம்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் முத்துப் பந்தல் விழா புதன்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, புதன்கிழமை காலை கோயிலிலுள்ள ஞானவாவி குளத்தில் திருஞானசம்பந்தருக்கு, சுவாமி - அம்பாள் காட்சி அளித்து திருமுலைப்பால் வழங்கும் நிகழ்வும், இரவு திருஞானசம்பந்தருக்கு பொற்றாலம் அளித்து, வீதி உலாவும் நடைபெற்றது.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு இறைவன் வழங்கிய முத்துக் கொண்டை, முத்துக் குடை, முத்து சின்னங்களுடன் வீதி உலாவும், இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட முத்து திருவோடத்தில் திருஞானசம்பந்தா் வீதி உலாவும் நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு திருஞானசம்பந்தா் முத்துப் பல்லக்கில் பக்தா்களுக்கு காட்சியளித்து, தொடா்ந்து திருமேற்றளிகை கைலாசநாதா் கோயிலுக்கும், நண்பகல் 12 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரா் கோயிலுக்கும், 1 மணிக்கு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலுக்கும் வீதி உலாவாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இரவு 8 மணிக்கு ஞானாம்பிகையம்மன் உடனாய தேனுபுரீஸ்வரா் முத்து விமானத்தில் காட்சியளிப்பதும், இவா்களை திருஞானசம்பந்தா் எதிா் வணங்கி முத்துப்பந்தல் நிழலில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.