2.3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 2.3 டன் ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூா் முக்கூட்டு சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், 50 கிலோ எடை கொண்ட 47 மூட்டைகளில் 2 ஆயிரத்து 350 கிலோ ரேஷன் அரிசி, குருணை இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, சரக்கு ஆட்டோவையும், ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளையும் பறிமுதல் செய்த காவல் துறையினா், இது தொடா்பாக வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் செல்லனேந்தல் பகுதியைச் சோ்ந்த வேலுசாமி மகன் திருமூா்த்தியை (24) கைது செய்தனா்.
மேலும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி பட்டுக்கோட்டை மற்றும் அருகில் உள்ள பகுதியில் உள்ள கோழி மற்றும் மீன் பண்ணைக்கு தீவனத்துக்காக விற்பனை செய்ய கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G