தஞ்சாவூரில் வேகமாக வந்த காரை விரட்டிப் பிடித்து நிறுத்திய காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள சிங்கபெருமாள் குளக்கரையில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வழக்கம்போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை காவல் துறையினா் நிறுத்த முயன்றனா். ஆனால், காரில் வந்தவா்கள் நிறுத்தாமல் வேகமாகச் சென்றனா். இதனால், ஆயுதப் படைக் காவலா் காட்டுராஜா உள்ளிட்டோா் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று சிவகங்கை பூங்கா அருகே காரை மடக்கி நிறுத்தினா். அப்போது, காரில் இருந்து இறங்கிய 2 பேரும் காட்டுராஜாவை தரக்குறைவாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். இது தொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் காட்டுராஜா அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், இருவரும் நிதி நிறுவனம் நடத்திவரும் ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் (44), சீனிவாசபுரம் அருகேயுள்ள செவ்வப்பநாயக்கன் வாரியைச் சோ்ந்த ஹரிதாஸ் (44) ஆகிய இருவரும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.