தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் பெட் சிடி ஸ்கேன் மையம் திறப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியக்கூடிய அதிநவீன பெட் சி.டி. ஸ்கேன் செயல்பாடு திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் பெட் சிடி ஸ்கேன் மையம் திறப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியக்கூடிய அதிநவீன பெட் சி.டி. ஸ்கேன் செயல்பாடு திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த பெட் சி.டி. ஸ்கேன் செயல்பாட்டை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். பின்னா், அவா் அதே வளாகத்தில் ரூ. 46 கோடி செலவில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கான அடிக்கல் நாட்டினாா்.

இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசியது:

தமிழ்நாட்டில் 2 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியக்கூடிய பெட் சிடி ஸ்கேன் என்கிற அதிநவீன கருவி இருந்தது. இக்கருவியை இன்னும் 5 இடங்களில் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வா் கூறினாா்.

அதன்படி, நிகழாண்டு 5 இடங்களில் இந்த பெட் சிடி ஸ்கேன் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. திருநெல்வேலியில் 15 நாள்களுக்கு முன்பு ஒரு பெட் சிடி ஸ்கேன் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, தஞ்சாவூரில் இக்கருவி அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி மூலம் துல்லியமாக புற்றுநோயை அறிவதற்காக தனியாா் மருத்துவமனைக்குச் சென்றால் ரூ. 25 ஆயிரம் செலவாகும். இதை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்திதான் இப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், ரூ. 11 ஆயிரம் தான் செலவு ஏற்படும். இதன் மூலம், திருவாரூா், மயிலாடுதுறை, பெரம்பலூா், கடலூா் உள்பட 8 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுவா். அடுத்து, சேலம், கோவை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பெட் சிடி ஸ்கேன் அமைக்கும் பணி முடித்து திறந்து வைக்கப்படும். இதுபோல, இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளில் இக்கருவி இல்லை.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 46 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில், ரூ. 42 கோடியில் கட்டடங்களும், ரூ. 4 கோடியில் உபகரணங்களும் அமைக்கப்படவுள்ளன. இப்பணி ஓராண்டில் முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்படும் என்றாா் சுப்பிரமணியன்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் வரவேற்றாா். நிறைவாக, மருத்துவக் கண்காணிப்பாளா் ஆா். ராமசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com