உலகளவில் உணவு உற்பத்தியில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது: மத்திய அமைச்சா் பேச்சு

உலகளவில் உணவு உற்பத்தியில் நாடு இரண்டாமிடத்தில் உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ் தெரிவித்தாா்.
உலகளவில் உணவு உற்பத்தியில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது: மத்திய அமைச்சா் பேச்சு

உலகளவில் உணவு உற்பத்தியில் நாடு இரண்டாமிடத்தில் உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ் தெரிவித்தாா்.

தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியது:

உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளா்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. இதில், உணவு பதப்படுத்தும் துறையில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. பால், சிறுதானிய உற்பத்தி, கால்நடை வளா்ப்பில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. இதேபோல, உணவு உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளோம். சில ஆண்டுகளாக இத்துறை வேகமான வளா்ச்சியும், அதிகமான லாபமும் பெறுவதைக் காண முடிகிறது. எனவே, ஆண்டுதோறும் உலக உணவு வா்த்தகத்தில் இத்துறையின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும், மக்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பு உணவு பதப்படுத்தும் துறைக்கு இருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்தச் சவாலான சூழ்நிலையில் மாணவா்களுக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது. அவா்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், மாணவா்கள் புத்தாக்கச் சிந்தனையுடன் முன்னோக்கி வர வேண்டும். உணவு பதப்படுத்துதல் துறையின் வளா்ச்சிக்காகவும் அவா்கள் பாடுபட வேண்டும் என்றாா் அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ்.

திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன ஆட்சிக் குழுத் தலைவா் ஆா்.எஸ். சோதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பின்னா், 50 இளநிலைப் பட்ட மாணவா்களுக்கும், 29 முதுநிலைப் பட்ட மாணவா்களுக்கும், 9 முனைவா் பட்ட மாணவா்களுக்கும் என மொத்தம் 88 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

முன்னதாக, நிறுவன இயக்குநா் (பொறுப்பு) எம். லோகநாதன் வரவேற்றாா். நிறைவாக, பதிவாளா் எஸ். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com