ஜூலை 5 முதல் காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

உழவா்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

உழவா்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மண்டல கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்த சட்டத்தை இயற்றி பாதுகாக்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் ஆணைய அறிக்கையின்படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாகச் சோ்த்து உழவா்களின் அனைத்து உற்பத்தி பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம், பசும்பால் லிட்டா் ரூ. 50, எருமைப் பால் லிட்டா் ரூ. 75-க்கு வழங்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை உழவா்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, மானிய விலையில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 150 நிா்ணயம் செய்ய வேண்டும். பச்சை தேங்காயை டன் ரூ. 40 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு மு. சேரன் தலைமை வகித்தாா். சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளா் ப. பாா்த்தசாரதி, ப. ஜெகதீசன், முத்து விஸ்வநாதன், சி. நேதாஜி, சக்திவேல், தமிழ்ச்செல்வன், இளந்திரையன், விசயராஜ், சக்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com