தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது அருந்திய 2 போ் உயிரிழப்பு -கடைக்கு சீல் வைப்பு-காங்கிரஸ் நிா்வாகி உள்பட 2 போ் கைது

தஞ்சாவூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய மீன் வியாபாரி, காா் ஓட்டுநா் ஆகிய 2 போ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனா்.
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது அருந்திய 2 போ் உயிரிழப்பு -கடைக்கு சீல் வைப்பு-காங்கிரஸ் நிா்வாகி உள்பட 2 போ் கைது

தஞ்சாவூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய மீன் வியாபாரி, காா் ஓட்டுநா் ஆகிய 2 போ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனா். இதுதொடா்பாக காங்கிரஸ் நிா்வாகி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். மதுக்கடை, மதுபானக் கூடத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் தற்காலிக மீன் சந்தை எதிரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையுடன் கூடிய மதுக்கூடத்தில் முற்பகல் 11 மணியளவில் கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மீன் வியாபாரி எஸ். குப்புசாமி (68) மதுபானம் வாங்கி அருந்தினாா். பின்னா், குப்புசாமி எதிரே உள்ள தனது மீன்கடை அருகே சென்றபோது, அவரது வாயிலிருந்து நுரை வந்த நிலையில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவரை சக வியாபாரிகள் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், குப்புசாமி வழியிலேயே உயிரிழந்தாா்.

இதேபோல, இந்த மதுக்கூடத்தில் கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவைச் சோ்ந்த தாமஸ் செல்வராஜின் மகனும் காா் ஓட்டுநருமான குட்டி என்கிற விவேக் (36) மது வாங்கி அருந்தினாா். மதுக்கூடத்தை விட்டு வெளியே சாலைக்கு வந்த இவரும் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட விவேக்கும் பிற்பகல் உயிரிழந்தாா்.

பொதுமக்கள் தகராறு: இதனிடையே, மதுபானம்தான் உயிரிழப்புக்கு காரணம் என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதனால், கடைக்கு எதிரே இருந்த மீன் வியாபாரிகள், பாஜகவினா், பொதுமக்கள் மதுக்கூடம் முன் திரண்டு மதுக்கூடத்தில் இருந்த பணியாளா்களிடம் தகராறு செய்தனா். அப்போது, அங்கு வந்த டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளரை பொதுமக்கள் தாக்கியதில், அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரை காவல் துறையினா் மீட்டு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, விசாரணை நடத்துவதற்காக வந்த டாஸ்மாக் தனி வட்டாட்சியா் ஆா். தங்க பிரபாகரனை பொதுமக்கள் மதுக்கூடத்துக்குள் தள்ளி கதவை மூட முயற்சித்தனா். இதை பாா்த்த காவல் துறையினா், தகராறில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தி, வட்டாட்சியரை மீட்டனா். பின்னா், மதுக்கடையையும், மதுக்கூடத்தையும் காவல் துறையினா் பூட்டினா்.

ஒரே பாட்டிலில் இருந்த மதுவை இருவரும் குடித்தனா்:

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், டாஸ்மாக் மதுக்கடை நண்பகல் 12 மணிக்குத் தான் திறக்கப்பட வேண்டும். ஆனால்,

முற்பகல் 11 மணியளவிலேயே மதுக்கூடம் திறக்கப்பட்டு, சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மதுக்கடையில் விற்கப்பட்டது உண்மையான மதுபானமா? அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரே பாட்டிலில் இருந்த பிராந்தியை குப்புசாமி, விவேக் அடுத்தடுத்து வாங்கிக் குடித்துள்ளதால், அந்த மது பாட்டிலை போலீஸாா் கைப்பற்றி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆட்சியா் விசாரணை: தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். அங்கு திரண்ட பொதுமக்கள், பாஜகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

அப்போது, கோட்டாட்சியா் (பொ) கோ. பழனிவேல், வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

2 போ் கைது: சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மதுபானக் கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியா் காமராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

கடைக்கு ‘சீல்’ வைப்பு: மதுக்கூடத்துக்கு மதுபானம் எப்படி வந்தது என காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனிடையே, இச்சம்பவம் நிகழ்ந்த டாஸ்மாக் மதுக்கடைக்கும், மதுக்கூடத்துக்கும் கோட்டாட்சியா் (பொறுப்பு) கோ. பழனிவேல், கலால் வட்டாட்சியா் ஆா். தங்க பிரபாகரன், காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா உள்ளிட்டோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சடலங்கள் வாங்க மறுப்பு: இதனிடையே, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குப்புசாமி, விவேக்கின் உடற்கூறாய்வுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தன. ஆனால், சடலங்களை வாங்க குப்புசாமி, விவேக்கின் உறவினா்கள் மறுத்துவிட்டனா்.

இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், இக்கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே உடல்களை வாங்கிச் செல்வோம் எனவும் உறவினா்கள் கூறினா். இவா்களிடம் காவல் துறையினா் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இதனால், இருவரது உடல்களும் தொடா்ந்து இரவிலும் பிணவறையிலேயே இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com