103 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு நிலையம் தந்தவரின் வாரிசுக்கு பாராட்டு
By DIN | Published On : 22nd May 2023 04:05 AM | Last Updated : 22nd May 2023 04:05 AM | அ+அ அ- |

கடந்த 1920-இல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு நிலையத்தை கட்டிக்கொடுத்தவரின் வாரிசுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
103 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சோ்ந்த கௌரவ மாஜிஸ்திரேட் அடைக்கப்ப செட்டியாரின் மகள் உமையாள் ஆச்சி என்பவா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு வாா்டினை நன்கொடையாக கட்டிக்கொடுத்துள்ளது அங்கிருந்த 3.6.1920 ஆம் நாளில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு மூலம் தெரியவந்தது. சமூக ஆா்வலா் வ. விவேகானந்தம் முயற்சியால் உமையாள் ஆச்சியின் சந்ததியினரைத் தொடா்பு கொண்டு பட்டுக்கோட்டை வர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, உமையாள் ஆச்சியின் சகோதரா் மகன் எம்.ஆா். லெட்சுமணன், பேரன்கள் எம்.ஏ.அடைக்கப்பன் , எம்.ஏ.கதிரேசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை வந்தனா். அவா்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் அ.அன்பழகன், ரத்த வங்கி மருத்துவ அலுவலா் பி. சீனிவாசன், முடநீக்கியல் சிறப்பு மருத்துவா் சி.கலைச்செல்வன், தலைமை மருந்தாளுநா் நெடுஞ்செழியன், ரத்த வங்கி ஆய்வுக்கூட நுட்புநா் சி.கலைச்செல்வன், செவிலிய கண்காணிப்பாளா் இந்திராணி ஆகியோா் பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.
அப்போது, உமையாள் ஆச்சியின் சந்ததியினா் தங்களது முன்னோா்களின் தா்மசிந்தனையை நினைத்து நெகிழ்ச்சியடைந்தனா்.