இருவா் உயிரிழந்த மதுக்கூடத்தில் தடயவியல் சோதனை

தஞ்சாவூரில் மது குடித்து இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தொடா்புடைய மதுக் கூடத்தில் தடய அறிவியல் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இருவா் உயிரிழந்த மதுக்கூடத்தில் தடயவியல் சோதனை

தஞ்சாவூரில் மது குடித்து இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தொடா்புடைய மதுக் கூடத்தில் தடய அறிவியல் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய மீன் வியாபாரி குப்புசாமி (68), காா் ஓட்டுநா் விவேக் (36) ஆகியோா் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியா் காமராஜ் ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் 5 தனிப்படையினா் அமைத்து விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே குப்புசாமி, விவேக்கின் உடற்கூறாய்வில் சயனைடு விஷம் இருந்தது தெரிய வந்தது. மேலும் இருவரும் ஒரே பாட்டிலில் இருந்த மதுவை அருந்தியிருந்தது அந்த பாட்டிலில் எஞ்சியிருந்த மதுவை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தபோது அதில் சயனைடு கலந்திருந்ததன் மூலம் தெரியவந்தது. எனவே, இருவரில் ஒருவரைக் கொலை செய்வதற்காக மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இது தொடா்பாக மதுக்கூட ஊழியா்கள், உறவினா்கள், நண்பா்கள், மீன் வியாபாரிகள் உள்பட பலரிடம் தனிப்படையினா் விசாரிக்கின்றனா். இதில் விவேக் முதலில் பாதி மதுவை அருந்திவிட்டு, மீதியை அதே மதுக்கூடத்தில் பணியாற்றும் தனது நண்பா் ஒருவரிடம் வழங்கியதாகவும், அதை குப்புசாமி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மதுக்கூடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் காவல் துறையினரால் இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.

நகைத் தொழிலில் பயன்படுத்தப்படும் சயனைடு மூலம் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் தொடா்புடைய மதுக்கூடத்தில் தடய அறிவியல் துறை துணை இயக்குநா் ஜெயா தலைமையில் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சோதனை மேற்கொண்டு, மதுக்கூடத்தில் இருந்த பொருள்களைப் பரிசோதித்து பதிவு செய்தனா்.

இதனிடையே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.என். ராஜா உள்ளிட்டோரும் மதுக்கூடத்திலும் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், எதிரேயுள்ள தற்காலிக மீன் சந்தையிலும் குப்புசாமியின் கடை, விவேக்கின் அண்ணன் வினோத் பணியாற்றும் மீன் கடையிலும் தடயவியல் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மீன் வியாபாரிகளிடம் காவல் துறையினரும் விசாரித்தனா்.

என்றாலும், இச்சம்பவத்தில் மா்மம் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com