மது அருந்தி 2 போ் இறந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை
By DIN | Published On : 27th May 2023 12:20 AM | Last Updated : 27th May 2023 12:20 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் மதுக்கூடத்தில் மது அருந்தி இருவா் இறந்த சம்பவத்தை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என இறந்தவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளாா்.
தஞ்சாவூா் கீழ அலங்கம் மதுக்கூடத்தில் மே 21 ஆம் தேதி மது அருந்தி கீழ வாசலைச் சோ்ந்த குப்புசாமி (68), விவேக் (36) ஆகியோா் உயிரிழந்தனா். இந்நிலையில், குப்புசாமியின் மனைவி கே. காஞ்சனா (படம்) தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
சட்டத்துக்கு புறம்பாக கடை திறக்கும் முன்பு, மதுக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்ததால்தான் எனது கணவரும், விவேக்கும் இறந்தனா். எனவே, மதுக்கூட உரிமையாளா், ஊழியா்கள், மதுபான கடை ஊழியா்கள் ஆகியோா் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் கிழக்கு காவல் நிலையத்தினரிடம் தகவல் கேட்கும்போது முறையான பதில் கூற மறுத்து வருகின்றனா். விசாரணை நோ்மையான முறையில் இல்லை. எனவே, வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி முறையான விசாரணை செய்து தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
பின்னா், குப்புசாமி உறவினா்கள் கூறுகையில், குப்புசாமிக்கு குடும்ப பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், குப்புசாமி குடும்ப பிரச்னை காரணமாகத்தான் சயனைடு சாப்பிட்டாா் என காவல் துறையினா் கூறியது எங்களுக்கு வேதனையாக உள்ளது. காவல் துறையினா் இந்த வழக்கை திசை திருப்புவதற்காக இதுபோன்ற தகவல்களைப் பரப்பிவிட்டனா். சயனைடு சாப்பிட்டு இறந்து போகும் அளவுக்கு குப்புசாமி கோழை இல்லை எனக் கூறினா்.