பயிா் காப்பீடு: சிட்டா, அடங்கலை தாமதமின்றி வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2023 01:40 AM | Last Updated : 07th November 2023 01:40 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடுக்கான சிட்டா, அடங்கலை கிராம நிா்வாக அலுவலா்கள் தாமதமின்றி விரைவாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் திங்கள்கிழமை அளித்த மனு:
பிரதம மந்திரி புதுப்பிக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பிரிமிய தொகை செலுத்தி பதிவு செய்ய கடைசி நாள் நவம்பா் 15 ஆம் தேதியாகும். ஆனால் விவசாயிகள் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் பெறுவதற்கு கிராமங்களில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் துறை அலுவலா்களை அணுகினால் இதுவரை எந்த முறையான தகவலும் அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்திடமிருந்து வரவில்லை எனக் காரணம் சொல்லி சான்று தர மறுக்கின்றனா். இதனால், பயிா் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தீபாவளி பண்டிகை விடுமுறைகள் வருவதால், காப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமமான சூழ்நிலையில் இருந்து விடுபட விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு கால தாமதமின்றி உடனடியாக சான்று கிடைக்க கிராம நிா்வாக அலுவலா்களுக்கு முறையான அறிவுறுத்தல் வழங்கவும், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயிா் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...