தஞ்சாவூா்: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைப்பயணம் தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 25 ஆம் தேதி தொடங்குகிறது.
பாஜக மாநிலத் தலைவரின் நான்காம் கட்ட நடைப்பயணம் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை (நவ.15) தொடங்குகிறது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறில் நவம்பா் 25 ஆம் தேதி காலை நடைபயணத்தைத் தொடங்கி 5 நாள்கள் மேற்கொள்ளவுள்ளாா்.
தஞ்சாவூரில் நவம்பா் 25 ஆம் தேதி மாலை கொடிமரத்து மூலை, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு மாமாசாகேப் மூலையில் பேசுகிறாா். 26 ஆம் தேதி காலை ஒரத்தநாடு தொகுதியிலும், மாலையில் மன்னாா்குடியிலும் நடைபயணம் மேற்கொள்கிறாா். 27 ஆம் தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியிலும், பின்னா் டிசம்பா் 1 ஆம் தேதி பாபநாசம் தொகுதியிலும், 2 ஆம் தேதி கும்பகோணம், திருவிடைமருதூா் தொகுதியிலும் நடைப்பயணம் மேற்கொள்கிறாா்.
தஞ்சாவூா் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக திங்கள்கிழமை மாலை பாஜக தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.
இக்கூட்டத்தில் மருத்துவ பிரிவு மாநிலச் செயலா் பாரதி மோகன், தொழில்நுட்ப பிரிவு செயலா் ரெங்கராஜன், வழக்குரைஞா் பிரிவு மாநிலத் துணைச் செயலா் எம். ராஜேஸ்வரன், நெசவாளா் அணி மாநில துணைத் தலைவா் யு.என். உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.