திருச்சி மண்டலத்தில் ஒரே மாதத்தில்ரேஷன் அரிசி கடத்தியதாக 140 போ் கைது
By DIN | Published On : 10th September 2023 12:57 AM | Last Updated : 10th September 2023 12:57 AM | அ+அ அ- |

திருச்சி மண்டலத்தில் ஒரே மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 140 போ் கைது செய்யப்பட்டனா் என குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவு இயக்குநா் (டி.ஜி.பி.) கே. வன்னியபெருமாள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மண்டலத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, அரியலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் அதிக அளவாக அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடத்தி வரப்பட்ட ரேஷன்அரிசி ஆயிரத்து 300 கிலோவும், திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட ஆயிரத்து 800 கிலோவும், லால்குடி பகுதியில் ஆயிரத்து 50 கிலோவும் கைப்பற்றப்பட்டன. மணப்பாறை அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோவும், புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதி சாலையில் கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 650 கிலோவும், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் பகுதியில் தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மண்டலத்தில் கடந்த மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுவரை கடத்தலில் ஈடுபட்டதாக 140 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.