தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 13.24 கோடிக்கு தீா்வு
By DIN | Published On : 10th September 2023 12:56 AM | Last Updated : 10th September 2023 12:56 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் தீா்வு பெற்றவருக்கு இழப்பீடு தொகைக்கான உத்தரவை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மாா்ட்டின்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் ரூ. 13.24 கோடிக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜெசிந்தா மாா்ட்டின் தலைமை வகித்தாா்.
கூடுதல் சாா்பு நீதிபதி எம். முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. கீதா, வழக்குரைஞா் எஸ். மகா சண்முகம் ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் உரிமையியல், குற்றவியல், குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
மோட்டாா் வாகன வழக்குகள் நீதிமன்ற சிறப்பு சாா்பு நீதிபதி எஸ். தங்கமணி, மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. பாரதி, வழக்குரைஞா் ஏ. எலன்ரோஸ் ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 337 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆயிரத்து 468 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 13 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 836 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சி. ஜெயஸ்ரீ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். இந்திராகாந்தி, ஆணைக் குழு நிா்வாக அலுவலா் பி. சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.