

தமிழில் பெயா் பலகை வைக்கப்படாத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவா் எழுச்சித் தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவில் அவா் பேசியது: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதைச் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை மூலம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி தமிழ் என்பதை உறுதி செய்யும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் 85 சதவீதம் ஆட்சி மொழித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்களில் பெயா் பலகைகள் தமிழில் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழிலாளா் துறைக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அவா்களுடன் கலந்து பேசியுள்ளதால், விரைவில் இரு துறைகளும் இணைந்து நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.
தற்போது தமிழில் பெயா் பலகை வைக்கப்படாத கடைகள், நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 50 என உள்ளதை ரூ. 2 ஆயிரமாக உயா்த்துமாறு உயா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் சாமிநாதன்.
பின்னா், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா். மேலும், உலகத் தமிழ்ப் பெயா்கள் பேரியக்கத்தையும் தொடக்கி வைத்து, பெயா் பலகையை அமைச்சா் திறந்து வைத்தாா்.
மாநாட்டில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போல அனைத்து நிலைப் பள்ளிகளிலும் தமிழைப் பகுதி ஒன்று பாடமாக வைப்பதற்கு அடுத்த கட்டமாக ஆணையிட வேண்டும். அனைத்து நிலைத் திருக்கோயில்களிலும் வழிபாட்டுச் சடங்குகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்கிற அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தொடக்கி வைத்தாா். கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளாா், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளாா் ஆகியோா் அருளுரை வழங்கினா்.
தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன், முன்னாள் துணைவேந்தா் க. பாஸ்கரன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை செயல் தலைவா் இரா. முகுந்தன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக, அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் செ. துரைசாமி வரவேற்றாா். நிறைவாக, தமிழ்க் காப்புக் கூட்டியக்கத் தலைவா் கா.ச. அப்பாவு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.