திருவையாறு அருகே பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
By DIN | Published On : 19th September 2023 01:18 AM | Last Updated : 19th September 2023 01:18 AM | அ+அ அ- |

திருவையாறு அருகே வடுகக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சேதமடைந்த வாழை மரங்கள்.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
திருவையாறு அருகேயுள்ள வடுகக்குடி, சாத்தனூா், வளப்பகுடி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் பாதியாக முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பு இதுபோல பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. எனவே, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலம் கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட வாழைக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.