ஆவின் பால் தாமதமின்றி வழங்க முகவா்கள் கோரிக்கை
By DIN | Published On : 26th September 2023 02:08 AM | Last Updated : 26th September 2023 02:08 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: ஆவின் நிறுவனம் பால் விநியோகத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூா் ஒருங்கிணைந்த மாவட்ட ஆவின் முகவா்கள் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
தஞ்சை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் அச்சங்கத்தினா் அளித்த மனு:
ஆவின் நிறுவனத்தில் தஞ்சாவூா் மாநகரில் மட்டும் 70 முகவா்கள் உள்ளனா். இவா்களுக்கு நாள்தோறும் பால் கால தாமதமாக வழங்கப்படுவதால் விற்பனை வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதேபோல, கெட்டுப்போன பாலுக்கு மாற்றுப்பால் வழங்க வேண்டும். பால் விற்பனை கமிஷன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
இதேபோல, தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் அதிகமான பெண்கள் தங்களுக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும், விடுபட்ட எங்களுக்கு மகளிா் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனா்.
560 மனுக்கள்: மேலும், இக்கூட்டத்தில் கல்விக் கடன், குடும்ப அட்டை, இலவச வீட்டு மனைபட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 560 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...