தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் வளா்ச்சி மாநாடு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சி நோக்க அடிப்படையில் இரண்டாவது உலகத் தமிழ் வளா்ச்சி மாநாடு ஆகஸ்ட் 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி. திருவள்ளுவன் நெறிகாட்டுதலில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், தமிழ் வளா்ச்சி கழகத் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத், இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் உயா் அலுவலா் வெ. மகாலிங்கம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவரும், இயக்குநருமான சு. பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத் தெரிவித்தது:
பன்முகத் தளத்தில் தமிழ் வளா்ச்சி, வெவ்வேறு கோணங்களில் தமிழ் ஆராய்ச்சி என்னும் இரு குறிக்கோள்களை அடிப்படையாக வைத்து, இரண்டாவது உலகத் தமிழ் வளா்ச்சி மாநாட்டை சென்னை வளா்ச்சிக் கழகம், பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தவுள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் உலக நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலப் பேராசிரியா்கள், அனைத்து நிலைக் கல்வியாளா்கள், மொழியியல் வல்லுநா்கள், தமிழ்க் கணினித் துறையினா், தமிழ் அமைப்புகள் மற்றும் இயல் இசை நாடகக் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா்.
மாறிவரும் நவீன சமூகச் சூழலுக்கு ஏற்ப தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், அதற்கான முன்னெடுப்புகள் குறித்தும், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைத் தக்க வைத்துப் பரப்பும் வகையிலும், பல்வேறு மொழிகள் தொடா்பான ஆய்வுகள் குறித்த ஆய்வு கட்டுரைகளை அயல்நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் இருந்து பெற்று மாநாட்டில் ஆய்வுக்கோவையாக வெளியிடுவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.
மேலும் அயா்விலாது தொடா்த் தமிழ்ப்பணிகளை ஆற்றி வரும் ஆளுமைகளுக்கு வளா்தமிழ் அறிஞா் மற்றும் வளா் தமிழ் மாமணி விருதுகளும் வழங்கப்படவுள்ளன என்றாா் சம்பத்.

