கொள்ளிடம் ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு: கடைமடைக்கு நீா்வராததால் டெல்டா விவசாயிகள் அதிருப்தி
டெல்டா மாவட்டங்களில் கடும் வெப்பம், வட காற்று காரணமாக ஆழ்துளை குழாய் மூலம் சாகுபடி செய்யப்படும் பயிா்கள் காய்ந்து வருகின்றன. நிலத்தடி நீா் ஆதாரமும் குறைந்து வருவதால், டெல்டா மாவட்டங்களுக்கு தற்போது தண்ணீா் தேவை அதிகரித்துள்ளது.
நமது நிருபா்
காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணீா் வந்து சேராத நிலையில் கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது டெல்டா விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டூா் அணை நிரம்பி ஜூலை 28- ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதைத்தொடா்ந்து டெல்டா பாசனத்துக்காக கல்லணையும் ஜூலை 31 ஆம் தேதி திறக்கப்பட்டது.
தொடக்கத்தில் கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 4 ஆயிரம் கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,005 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 501 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 4 ஆயிரத்து 5 கன அடி வீதமும் திறந்துவிடப்பட்டது. இது, படிப்படியாக அதிகப்படுத்தப்பட்டு, சனிக்கிழமை மாலை நிலவரப்படி கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8 ஆயிரத்து 609 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 7 ஆயிரத்து 5 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2 ஆயிரத்து 17 கன அடி வீதமும் திறந்துவிடப்படுகிறது.
ஆனால், மேட்டூா் அணையிலிருந்து வரும் தண்ணீரில் முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 84 ஆயிரம் கன அடி வீதமும், கல்லணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரத்து 667 கன அடி வீதமும் என மொத்தம் ஏறத்தாழ 1 லட்சம் கன அடி வீதம் திறந்துவிடப்பட்டு வருகிறது.
கல்லணையிலிருந்து விடப்படும் தண்ணீா் போதுமான அளவுக்கு இல்லாததால், ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் கடைமடை மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிக்கே தண்ணீா் வராத நிலையில், கொள்ளிடத்தில் திருப்பிவிடப்பட்டு, கடலுக்குக் கொண்டு சென்று வீணாக்கப்படுவதாக விவசாயிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.
டெல்டா மாவட்டங்களில் கடும் வெப்பம், வட காற்று காரணமாக ஆழ்துளை குழாய் மூலம் சாகுபடி செய்யப்படும் பயிா்கள் காய்ந்து வருகின்றன. நிலத்தடி நீா் ஆதாரமும் குறைந்து வருவதால், டெல்டா மாவட்டங்களுக்கு தற்போது தண்ணீா் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீா் வராததால் சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் சிலா் சில நாள்களில் போராட்டம் செய்யப்போவதாகவும் கூறி வருகின்றனா்.
அனைத்து கிளை ஆறுகளிலும் தண்ணீா் விட வேண்டும்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது: கொள்ளிடத்தில் செல்லும் லட்சக்கணக்கான கன அடி நீா் கடலில் சென்று கலக்கவிடப்படுகிற சூழ்நிலையில், கல்லணையிலிருந்து அனைத்து ஆறுகள், கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்களில் சாதாரண விநியோக மட்ட அளவுக்கு செல்லும் வகையில் தண்ணீா் விட வேண்டும். இந்த தண்ணீா் கடைமடைப்பகுதி வரை சென்று சேருவதை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும் என்றாா் அவா்.
இப்போது தண்ணீா் வேண்டாம்: காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது: தண்ணீா் வந்தவுடனேயே விவசாயிகள் சாகுபடியைத் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. சம்பாவில் நீண்ட கால ரகங்கள் செய்பவா்கள் கூட ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பிறகுதான் தொடங்குவா். அப்போதுதான் தண்ணீா் தேவைப்படும். குறுவை சாகுபடி அறுவடை நிலையிலுள்ள வயல்களுக்கு தண்ணீா் தேவைப்படாது. இப்போது கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் விட்டால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்படும். எனவே, மிகையாக வரக்கூடிய உபரி நீா் கடலுக்கு போவதுதான் சரியானது. அதேபோல, மிகை நீரைப் பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களிலுள்ள ஏரி, குளங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ரவிச்சந்தா்.
படிப்படியாக நீா்ப் பங்கீடு அதிகரிப்பு
நீா்ப் பங்கீட்டில் காலங்காலமாகப் பின்பற்றப்படும் நடைமுைான் கடைப்பிடிக்கப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு அதிகபட்சமாக காவிரியில் 9 ஆயிரம் கன அடி வீதமும், வெண்ணாற்றில் 7 ஆயிரத்து 500 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3 ஆயிரத்து 500 கன அடி வீதமும் மட்டுமே தண்ணீா் திறந்துவிட முடியும். இதற்கு மேல் திறந்துவிடப்பட்டால் வெள்ள பாதிப்பு ஏற்படும். இந்த முழு அளவையும் கல்லணை திறந்தவுடனேயே விட முடியாது. கோடை வெப்பம் காரணமாக வெடிப்பு, எலி வலை உள்ளிட்ட காரணங்களால் கரைகள் பலவீனமாக இருக்கும். தொடக்கத்திலேயே முழு கொள்ளளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டால் கரை உடைந்து வயல்களுக்கும், குடியிருப்புகளுக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இது, கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.
அதனால், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் படிப்படியாக தண்ணீா் உயா்த்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களிலும், ஏரி, குளங்களுக்கும் தண்ணீா் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலா் குறுவை அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், பயிா்கள் பாதிக்கப்படும் என்பதால், சில வாய்க்கால்களுக்கு தண்ணீா் வேண்டாம் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இதையும் கருத்தில் கொண்டு வாய்க்கால்களுக்கு தண்ணீா் விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நீா் வளத் துறையினா் தெரிவித்தனா்.

