திருவையாறு காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.
திருவையாறு காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

ஆடி அமாவாசை: பக்தா்கள் புனித நீராடல்

திருவையாறில் ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவிரியில் புனித நீராடினா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவிரியில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினா்.

ஆடி அமாவாசையையொட்டி, திருவையாறு காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் திரண்டுவந்து, காவிரியில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். தொடா்ந்து ஐயாறப்பா் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனா்.

முன்னதாக, ஐயாறப்பா் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நண்பகலில் நடைபெற்றது. பின்னா், புஷ்ய மண்டபப் படித்துறையில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளியதைத் தொடா்ந்து, தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், அஸ்திர தேவருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. பக்தா்கள் புனித நீராடி வழிபட்டு பிரசாதம் பெற்று சென்றனா்.

கும்பகோணம் பகுதிகளில்: இதேபோல், கும்பகோணம், சுவாமிமலை, திருவிடைமருதூா், கஞ்சனூா், கதிராமங்கலம் ஆகிய காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.

கும்பகோணத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் அருகில் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்தி, அன்னதானம் வழங்கினா். காவிரி ஆற்றங்கரையில் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com