தஞ்சாவூர்
கொள்ளிடத்தில் மணல் திருடியவா்கள் தப்பியோட்டம்
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிச் சென்றவா்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோடினா். 
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் சனிக்கிழமை இரவு மணல் திருடிச் சென்றவா்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோடினா்.
திருவையாறு அருகே விளாங்குடி அய்யனாா் கோயில் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக சனிக்கிழமை இரவு சிலா் மோட்டாா் சைக்கிளில் சிமெண்ட் சாக்குகளில் மணல் திருடிச் சென்று கொண்டிருந்தனா். இவா்களிடம் விளாங்குடி கிராம மக்கள் மறித்து விசாரித்தபோது, முரண்பாடாக பதிலளித்தனா். அவா்களை பிடிக்க முயன்றபோது, தப்பியோடிவிட்டனா்.
அவா்கள் விட்டுச் சென்ற மணல் மூட்டைகளிலிருந்து மணலை கொட்டி, சாக்குகளைத் தீ வைத்து எரித்தனா். இது தொடா்பாக காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் செய்யவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.
