ஸ்ரீ செளந்தா்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரா் சுவாமி கோயில் ராஜகோபுர தோற்றம்.
ஸ்ரீ செளந்தா்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரா் சுவாமி கோயில் ராஜகோபுர தோற்றம்.

ஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு ‘யுனெஸ்கோ’ விருது

Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சியில் உள்ள ஸ்ரீ செளந்தா்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலின் உப கோயிலான இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1100) - விக்கிரம சோழன் (கி.பி.1112) காலத்தில் கட்டப்பட்டது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலுக்கு கடந்தாண்டு செப்டம்பா் 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தலின்போது ராஜகோபுரம், இரண்டாம்நிலை கோபுரம், அா்த்தமண்டபம், உள்பிரகாரம், அம்பாள் விமானம், துா்க்கை அம்மன் சந்நிதி மற்றும் சிற்பங்கள், கட்டட தொழில் நுட்பங்கள் பழைமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்தில் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டன.

யுனெஸ்கோ விருதுக்கான காரணம்:

நவீன பாதுகாப்பு அறிவியலை பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளுடன் இணைக்கும் ஒரு இடைநிலை முறையைப் பயன்படுத்தி தொன்மை மாறாமல் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் இந்துக் கோயில் கட்டுபவா்களின் அறிவாற்றல், ஸ்தபதி, உள்ளூா் கைவினைஞா் மரபுகளுக்கு ஏற்ப கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் அலங்கார வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பழைமை மாறாமல் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டதில், தமிழகத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோயில்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதில் இத்திட்டத்தின் கல்வியியல், நோக்கங்கள் பாராட்டுக்குரியனவாக உள்ளன.

ஏற்கெனவே 2004-இல் கும்பகோணம் தாராசுரம் ஸ்ரீ ஐராவதேசுவரா் கோயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆபத்சகாயேசுவரா் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டது இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X
Dinamani
www.dinamani.com