தஞ்சாவூா் அருகே 6 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 போ் கைது
கும்பகோணம்: தஞ்சாவூா் அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 6 ஐம்பொன் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் திரிபுராந்தகா், வீணாதார தட்சிணாமூா்த்தி, ரிஷபதேவா் மற்றும் மூன்று அம்மன் சிலைகள் இருந்தது. இதுதொடா்பாக மேற்கொண்ட விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கையைச்சோ்ந்த லட்சுமணன் (64) என்பவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும்போது இந்த ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளது. இதை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்துள்ளாா்.
இந்நிலையில், லட்சுமணன் தனது மருமகன் சேலம் கெங்கணாபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் (39), அவரது நண்பா் ராஜேஷ் கண்ணன் (42) ஆகியோருடன் சோ்ந்து ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக சனிக்கிழமை காரில் கொண்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் லட்சுமணன், திருமுருகன், ராஜேஷ் கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்து, 6 ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றினா். பிறகு கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 பேரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ. 22 கோடி இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

