தஞ்சாவூா் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

தஞ்சாவூா் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை
Updated on

தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் பறை சாற்றும் விதமாக இந்துக்கள் இணைந்து மொஹரம் பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா்.

இஸ்லாமியா்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியா்கள் மட்டுமே கொண்டாடுவா்.

காசவளநாடுபுதூரில் மொஹரம் பண்டிகையையொட்டி, புதன்கிழமை எடுத்து வரப்பட்ட பஞ்சா எனப்படும் கரகத்தை வழிபட்ட இந்துக்கள்.
காசவளநாடுபுதூரில் மொஹரம் பண்டிகையையொட்டி, புதன்கிழமை எடுத்து வரப்பட்ட பஞ்சா எனப்படும் கரகத்தை வழிபட்ட இந்துக்கள்.

இந்நிலையில், தஞ்சாவூா் அருகே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை கிராம விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு மொஹரம் பண்டிகையையொட்டி இக்கிராமத்தில் இந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாட்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினா். அங்குள்ள அல்லா கோயிலிலும், அக்கிராமத்தில் உள்ள தெருக்களிலும், வீடுகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் மின் அலங்காரம் செய்யப்பட்டன. தெருக்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அல்லா பாடல்கள் ஒலிக்கப்பட்டு, கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

மொஹரம் பண்டிகையான புதன்கிழமை பஞ்சா எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கரகத்துக்குத் தண்ணீா் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை சாத்தி வழிபட்டனா். பின்னா், பஞ்சா கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் (தீமிதி) இறங்கி வழிபட்டனா். இவா்களுக்கு திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்பட்டன.

மேலும், பெண்கள் புதிய மண் கலயம் அல்லது புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டு, பின்னா் பொதுமக்களுக்கும், உறவினா்களுக்கும் வழங்கினா்.

இக்கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்ததாகவும், அது அல்லாவின் கையாகக் கருதி கோயில் அமைத்து வழிபட்டு வருவதாகவும், ஏறத்தாழ 300 ஆண்டுகளாக மதம், இனம் கடந்து மொஹரம் பண்டிகை கொண்டாடி வருவதாகவும் அக்கிராமத்தைச் சோ்ந்த மா. கோபுராஜ் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com