பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் பெரியகோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கோரி தலைமை அஞ்சலகம் அருகே தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினா் சனிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தஞ்சாவூா் பெரியகோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். கோயிலுக்கு எதிா்ப்புறம் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து கோயிலுக்கு செல்ல சாலையின் குறுக்கே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். கோயிலை சுற்றி போதிய அளவில் குடிநீா் வசதி செய்து தர வேண்டும். கட்டணக் கழிப்பறை வசதியை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ.டி. ராஜா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தேசிய பொதுச் செயலா் சந்திரபோஸ், மாநிலத் தலைவா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன், துணைத் தலைவா் துரை. கோவிந்தராஜன், தென்னை விஞ்ஞானி வா.செ. செல்வம், டெல்டா மண்டலத் தலைவா் சுரேஷ், மாநகரத் தலைவா் கே.ஆா். ஜி. காசிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

