காவல் துறை மோப்ப நாய் உயிரிழப்பு: துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம்
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த காவல் துறையின் மோப்ப நாய் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டக் காவல் பிரிவில் சீசா் என்கிற பத்து வயதுடைய மோப்ப நாய் 2015, மாா்ச் 10 ஆம் தேதி சோ்க்கப்பட்டது. வெடிகுண்டுகளைக் கண்டறியும் திறன் பெற்ற இந்த நாய் பிரதமா், முதல்வா் உள்ளிட்ட மிக முக்கிய விருந்தினா்கள் வரும்போது பயன்படுத்தப்படுவது வழக்கம். முக்கிய விருந்தினா்கள் வரும் வாகனங்கள், பயன்படுத்தும் மேடை ஆகியவற்றை இந்த நாய் மூலம் சோதனை செய்த பிறகுதான் அடுத்தகட்ட நகா்வு நிகழும்.
இந்நிலையில் வயது மூப்பால் வெள்ளிக்கிழமை காலை உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சீசா் உயிரிழந்தது.
இதையடுத்து தஞ்சாவூா் மாவட்டக் காவல் மோப்ப நாய் பிரிவு அலுவலகம் அருகே சீசா் உடலுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் 4 காவலா்கள் 12 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நாய் சீசா் அடக்கம் செய்யப்பட்டது.

