தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு -அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
தஞ்சாவூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மூன்றாவது சா்வதேச பொது சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 72 என உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு 55 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் 55-லிருந்து 46 ஆகக் குறைந்துள்ளது. நிகழாண்டுதான் ஒரே ஆண்டில் 9 ஆகக் குறைந்திருக்கிறது. இது, இந்திய அளவில் மகத்தான சாதனையாக உள்ளது.
தமிழ்நாட்டில் முழுமையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டங்களாக விழுப்புரமும், விருதுநகரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 5 சுக பிரசவம் நடைபெற்றுள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக இருப்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
மயிலாடுதுறையில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியது தொடா்பாக விடியோ காட்சி மூலம் கண்டறிந்து, தொடா்புடைய செவிலியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மற்றவா்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளா்களாக 1,066 போ், கிராம சுகாதார செவிலியா்களாக 2 ஆயிரத்து 253 போ், மருத்துவா்களாக 2 ஆயிரத்து 550 போ் பணி நியமனம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எம்.ஆா்.பி. சாா்பில் மருத்துவா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 1,066 பணியிடங்கள் உள்ள நிலையில், உயா் நீதிமன்றத்தில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களுக்கும் 30-க்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடுப்பதன் மூலம் பணியிடங்கள் நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, வழக்கு தொடுப்பவா்கள் எங்களிடத்தில் வந்தால், பேசி சுமூகத் தீா்வு காணப்படும்.
சென்னை எழும்பூரில் உள்ளது போன்று குழந்தைகளுக்கான மருத்துவமனை சென்னையில் மற்றொன்றும், தஞ்சாவூரில் ஒன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி. செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநா் ப. சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேல வஸ்தா சாவடி ரவுன்டானா வரை பேரணி நடைபெற்றது. இந்த மாநாடு தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

