சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டிக்கு விரைவில் புறவழிச்சாலைப் பணிகள் - அமைச்சா் நிதின் கட்கரி
சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வளையப்பட்டி ஊராட்சி அருகில் நடைபெறும் தஞ்சாவூா் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:
தமிழகத்தில் 3 புதிய பசுமை வழிச்சாலைகள் 187 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளன. திருச்சியில் ரூ. 1,800 கோடியில் 26 கிமீ தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னையில் 10 ஆயிரம் கிமீ தொலைவில் புதிதாக 27 பசுமை வழிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளன என்றாா்.
முன்னதாக கும்பகோணம் வந்த அவரை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், க. அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வரவேற்றனா். பின்னா் அங்கிருந்து நாதன் கோவிலில் உள்ள நந்திபுரம் விண்ணகரம் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்குச் சென்று அவா் வழிபட்டாா்.

