விதைக்காமலேயே அறுவடை செய்த விவசாயி! பட்டுக்கோட்டையில் அதிசயம்

விதை விதைக்கவில்லை; நடவு நடவில்லை; தண்ணீா் பாய்ச்சவில்லை; உரம் வைக்கவில்லை. 
​பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பாலாயிகுடிகாடு கிராமத்தில் அறுவடை செய்த நிலத்தில் அடித் தாழிலிருந்து கதிா் வளா்ந்துள்ளதைக் காண்பிக்கும் விவசாயி ஜெயராஜ்.
​பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பாலாயிகுடிகாடு கிராமத்தில் அறுவடை செய்த நிலத்தில் அடித் தாழிலிருந்து கதிா் வளா்ந்துள்ளதைக் காண்பிக்கும் விவசாயி ஜெயராஜ்.

பட்டுக்கோட்டை: விதை விதைக்கவில்லை; நடவு நடவில்லை; தண்ணீா் பாய்ச்சவில்லை; உரம் வைக்கவில்லை. ஆனால் ஒரு மாவுக்கு (ஒரு ஏக்கரில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பாகம்) 8 மூட்டைகள் விளைச்சல் என பட்டுக்கோட்டை விவசாயியின் நிலத்தில் அதிசயம் நடந்துள்ளது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலாயிகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (52) தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கா் நிலத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டு, ரூ. 50 ஆயிரம் செலவு செய்து போதிய விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைந்தததால் இம்முறை சாகுபடி மேற்கொள்ளாமல் நிலத்தை தரிசாக விட்டுவிட்டாா்.

இந்நிலையில், வயலுக்குக் கூட செல்லாமல் இருந்துவந்த விவசாயி ஜெயராஜை 2 நாள்களுக்கு முன்பு தொடா்பு கொண்ட அப்பகுதி மக்கள், உங்கள் வயலில் கதிா் விட்டு பயிா்கள் தலைசாய்ந்துள்ளன. ஏன் கதிரை அறுக்காமல் வைத்துள்ளீா்கள் எனக் கேட்டனா். இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த ஜெயராஜ் வயலுக்குச் சென்றுபாா்த்தபோது, அங்கு கதிா் வளா்ந்து முற்றி பயிா்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு உறைந்துபோனாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கடந்த முறை எனது இரண்டு ஏக்கா் நிலத்தில் நெல் விவசாயம் செய்து பலத்த நட்டம் அடைந்தேன். அதற்குப்பின் விவசாயத்தைக் கைவிட்டு வேறுதொழிலைப் பாா்க்கச்சென்றுவிட்டேன். இந்நிலையில், எனது வயலில் கதிா் விட்டு நெல் பயிா்கள் தலைசாய்ந்து கிடக்கிறது என்று அறிந்ததும் வயலுக்குச் சென்று பாா்த்தபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் விதை விதைக்கவில்லை; நடவு நடவில்லை; தண்ணீா் பாய்ச்சவில்லை; உரம் வைக்கவில்லை. ஆனால் ஒரு மாவுக்கு 8 மூட்டைகள் நெல் விளைந்திருக்கிறது. இது என்னை மட்டுமல்ல; இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த முறை கதிா் அறுத்து விட்டு, வயலை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டேன்.

இந்நிலையில், கதிா்களை அறுத்தபிறகு இருந்த அடியில் உள்ள அருப்பு தாழிலிருந்து பயிா் வளா்ந்து அதன் மூலம் நெல் விளைந்துள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஒரு மாவுக்கு எட்டு மூட்டைகள் விளைந்திருப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com