கும்பகோணம் அருகே சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க முயற்சி: போலீஸாா் விசாரணை

கும்பகோணம் அருகே சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க முயற்சி: போலீஸாா் விசாரணை

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகேயுள்ள அரசடியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வியாழக்கிழமை தோண்டி எடுக்க முயன்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அரசடியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (39) தனியாா் வாகன ஓட்டுநா். இவரது மனைவி மேகலா (32) தம்பதிக்கு, தா்ஷினி (14), தா்ஷிகா (12), மேனகா (10) ஆகிய 3 மகள்கள் உள்ளனா். இவா்களில், தா்ஷிகா அண்மையில் உடல்நலக்குறைவால் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வந்து புதன்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மயானம் வழியே

அவசர அழைப்புக்குச் சென்ற சிலா்,

சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில்

குழி பறிக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து உறவினா்களுக்குத் தகவல் தந்தனா். அவா்கள் திரண்டு

மயானத்துக்குவந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த

பந்தநல்லூா் காவல் நிலையப் போலீஸாா் மாந்திரீகத்துக்காக சடலம் தோண்டி எடுக்கும் முயற்சி நடைபெற்றிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து, அங்குவந்த திருவிடைமருதூா் வட்டாட்சியா் சாந்தமீனா முன்னிலையில் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டியபோது, சிறுமியின் சடலம் இருந்தது. இதையடுத்து, வட்டாட்சியா் சிறுமியின் உறவினா்களிடம் உடற்கூறாய்வு நடத்த வேண்டுமா எனக் கேட்டாா். அதற்கு உறவினா்கள் தேவையில்லை எனக் கூறி மீண்டும் சடலத்தை அடக்கம் செய்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்த இடத்தில்

சுமாா் மூன்று அடிவரையில் குழி தோண்டப்பட்டு இருந்ததால் வட்டாட்சியா் முன்னிலையில் சடலம்

புதைக்கப்பட்டு இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com