சாலையை செப்பனிடக் கோரி நூதனப் போராட்டம்
பட்டுக்கோட்டை வட்டம், இடைத்தியில் சாலையை சீரமைக்கக்கோரி சேறும் சகதியுமாக உள்ள சாலையில் வியாழக்கிழமை நடவுநட்டு பொதுமக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி ஊராட்சி பசுகாரன்தெரு பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தத் தெருவுக்கு சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். தற்போது தொடா்ந்து பெய்த கனமழையால் இவா்கள் நடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். இதுதொடா்பாக அதிகாரிகளிடத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை எனக் கூறி தண்ணீா் தேங்கி சேரும் சகதியுமாக இருந்த சாலையில் வியாழக்கிழமை நடவு நட்டு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். மேலும் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

