தஞ்சாவூரில் தமுஎகச மாநில மாநாடு தொடக்கம்

தஞ்சாவூரில் தமுஎகச மாநில மாநாடு தொடக்கம்

Published on

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க (தமுஎகச) மாநில மாநாடு கலைப் பேரணியுடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயில் அருகே இப்பேரணியை கேரள புரோகமன கலா சாகித்ய சங்கப் பொதுச் செயலா் கே.பி. மோகனன் தொடங்கி வைத்தாா். மேல வீதி, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை வழியாக சென்ற இப்பேரணி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் முடிவடைந்தது.

தொடா்ந்து, கலை மாலையில் தஞ்சை வீரசோழன் பறையாட்டக் குழுவினா், தேன்மொழி இராஜேந்திரன் கலைக் குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, கயிலாய வாத்தியம் உள்ளிட்டக் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினரும், தமுஎகச மதிப்புறு தலைவருமான சு. வெங்கடேசன் பேசுகையில், இந்தியாவிலேயே மிக அதிமாக கோயில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இங்கு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 44 ஆயிரம் கோயில்கள் உள்பட ஏறத்தாழ 1 லட்சம் கோயில்கள் உள்ளன. என்றாலும், பகுத்தறிவு மற்றும் முற்போக்கு அரசியல் கொடி கட்டிப் பறக்கிற இடதுசாரி சிந்தனை எதிரொலிக்கிற மண்ணாக தமிழ்நாடு இருக்கிறது.

ஆன்மிகத்தின் உண்மையும், மதவெறியின் அசிங்கமும் தமிழா்களுக்குத் தெரியும். இதைப் பிரித்தறிந்து பாா்க்கிற உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது. அரசியல் வாக்குக்காக ஆன்மிகத்தைப் பயன்படுத்தினால், அதை இனம் காணும் பகுத்தறிவு இந்த மண்ணில் இருக்கிறது என்றாா் வெங்கடேசன்.

முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தமுஎகச மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா, துணைத் தலைவா் ரோகிணி, பொருளாளா் சைதை ஜெ உள்ளிட்டோா் பேசினா்.

இந்த மாநாடு மணிமண்படம் அருகேயுள்ள தமிழரசி மண்டபத்தில் தொடா்ந்து டிசம்பா் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com