முதலீட்டுத் திட்டங்கள் அறிவித்து ரூ. 35 கோடி மோசடி வழக்கில் தம்பதி கைது

முதலீட்டுத் திட்டங்கள் அறிவித்து ரூ. 35 கோடி மோசடி வழக்கில் தம்பதி கைது

Published on

தஞ்சாவூா் அருகே அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 35 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி மோசடி செய்த தம்பதியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே வழுத்தூரைச் சோ்ந்தவா் மா்ஜித் அலி (44). இவரது மனைவி ஹவா பீவி (40). இவா்கள் இருவரும் 2016-ஆம் ஆண்டு மா்ஜித் ட்ரான்ஸ்போா்ட் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி, கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடமிருந்து ரூ. 35 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக மா்ஜித் அலி, ஹவா பீவி மீது தஞ்சாவூா் பொருளாதார குற்றக் காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், மதுரை அருகே கப்பலூரில் தலைமறைவாக இருந்த மா்ஜித் அலி, ஹவா பீவியை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரும் நிறுவனத்துக்குச் சொந்தமான 18 பேருந்துகள், 20 காா்கள், 4 ஆட்டோக்கள், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை விற்று பல்வேறு இடங்களில் நிலம், வீடுகளை வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இச்சொத்துகளைக் காவல் துறையினா் கையகப்படுத்தி வருகின்றனா். இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவா்களில் இதுவரை புகாா் கொடுக்காமல் இருந்தால், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகே ரெட்டிபாளையம் சாலை ஸ்ரீராம் நகரிலுள்ள பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் செய்யலாம் என அப்பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com