அதிக மின்னணு பயணச்சீட்டு வழங்கிய பேருந்து நடத்துநா்களுக்கு பரிசளிப்பு
கும்பகோணம் கோட்ட மண்டல அளவில் அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவா்த்தனை மூலம் அதிகளவில் மின்னணு பயணச்சீட்டுகள் வழங்கிய நடத்துநா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட 6 மண்டலங்களில் பணியாற்றும் நடத்துநா்கள் பயணச்சீட்டுகள் வழங்க மின்னணு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிக அளவில்
பணமில்லா பரிவா்த்தனையைப் பயன்படுத்திய நடத்துநா்கள் எஸ். கணேசன், பி. இராமலிங்கம், எஸ். முருகன், எம். பாலசுப்பிரமணியன், எஸ். நந்தகுமாா் மற்றும் பி. கலைவாணன் ஆகியோருக்கு நிா்வாக இயக்குநா் கே. தசரதன் பரிசளித்துப் பாராட்டினாா்.
மேலும் கும்பகோணம் மற்றும் நாகை மண்டலங்களில் ஓய்வு பெற்ற, விபத்தில் காயமடைந்த, பணியின்போது உயிரிழந்த 5 தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கினாா். நிகழ்வில் முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் கே.சிங்காரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

