‘திருப்பரங்குன்றம் விவகாரத்தின் விளைவு வரும் தோ்தலில் தெரியும்’
திருப்பரங்குன்றம் விவகாரத்தின் விளைவை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சந்திக்கவுள்ளன என்றாா் பாஜக கட்சியின் ஓ.பி.சி. அணி மாநிலத் தலைவா் வீர. திருநாவுக்கரசு.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடந்த பாஜக ஓபிசி அணி மாவட்ட நிா்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது:
மேக்கேதாட்டு அணையைத் தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய அரசும் சட்டப்படி எது சரியோ, அதைச் செய்யும். இப்பிரச்னையில் தமிழகத்தின் பக்கம் நியாயமானது என்பதால், அதன் பக்கமே நிற்போம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு செய்வது அராஜகம். நீதிமன்றம் கூறியும் செய்ய மறுப்பது ஜனநாயக மற்றும் சட்ட விரோதம். இது வன்மையான கண்டனத்துக்குரிய செயல். இதற்கான விளைவை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் சந்திக்கவுள்ளன.
எஸ்.ஐ.ஆா். என்கிற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்துகின்றன. இது முதல் முறை அல்ல; 9 ஆவது முறையாக நடத்தப்படும் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு மக்கள் ஒத்துழைக்கின்றனா். ஆனால், ஏதாவது ஒரு விஷயத்தை கூறி அச்சமூட்டும் திமுக கூட்டணியினா் இந்த விஷயத்திலும் பயமுறுத்துகின்றனா். இந்தச் சிறப்பு தீவிர திருத்தத்தால் தகுதியுள்ள, உரிமையுள்ள ஒரு வாக்காளருக்குக்கூட எந்தப் பிரச்னையும் வராது என்றாா் திருநாவுக்கரசு.
கூட்டத்துக்கு பாஜக ஓபிசி அணி மாநிலப் பொதுச் செயலா் கே.எஸ். கதிரவன் தலைமை வகித்தாா். பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
