மேக்கேதாட்டு அணை பிரச்னையை கண்டித்து ரயில் மறியல்: 112 போ் கைது!
மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடா்பான உச்ச நீதிமன்றத் தீா்ப்பையும், மத்திய அரசையும் கண்டித்து தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 112 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு முற்பகல் 11.55 மணியளவில் வந்த திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் எல். பழனியப்பன் தலைமையில் விவசாயிகள் மறித்தனா். சுமாா் 5 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கத் துடிக்கும் உச்ச நீதிமன்றத் தீா்ப்பையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் உள்பட நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 112 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
