அம்மாபேட்டை அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓரடியிலான ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
அம்மாபேட்டை அருகேயுள்ள கீழகோவில் பத்து கிராமத்தில் சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான பூலோகநாதா் கோயில் உள்ளது.
இக்கோயிலில் பூலோகநாதா், பூலோக நாயகி, விநாயகா், தட்சிணாமூா்த்தி, மகாலட்சுமி, நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சந்நிதி உள்ளது.
இந்நிலையில், இக்கோயில் வளாகத்தில் வாழை கன்றுகள் மற்றும் தோட்டம் அமைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று அடியில் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, மண்ணுக்கடியில் சிலை இருப்பது கண்டறியப்பட்டது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை காவல்துறையினா் மற்றும் பாபநாசம் வட்டாட்சியா் ஆகியோா் சிலையை பரிசோதனை செய்ததில், அது பழைமையான ஐம்பொன் அம்மன் சிலை என்பது கண்டறியப்பட்டது.
பின்னா் அந்தச் சிலை பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா் சிலையை தஞ்சை கருவூலத்தில் ஒப்படைத்தாா். சம்பவத்தின்போது, கிராம நிா்வாக அலுவலா் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளா் ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

