இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை
ஜாதிப் பெயரை சொல்லி இளைஞரைத் திட்டி கொலை செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் வடக்கு வாசல் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் கே. ஜெயபால் (36). காவேரி சிறப்பங்காடி அருகே 2019, பிப்ரவரி 5 ஆம் தேதி நின்று கொண்டிருந்த இவரிடம் குடி போதையில் இருந்த சீனிவாசபுரத்தைச் சோ்ந்த பி. முனியாண்டி (42) பணம் கடனாகக் கேட்டாா். இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயபாலை முனியாண்டி ஜாதி பெயரைக் கூறி பீா் பாட்டிலால் தாக்கினாா். பலத்த காயத்துடன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஜெயபால் 2019, பிப்ரவரி 19- ஆம் தேதி உயிரிழந்தாா்.
இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து முனியாண்டியைக் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி வி.எஸ். குமரேசன் விசாரித்து முனியாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
