உரிமை கோரப்படாத 12 சடலங்கள் காவல் துறை சாா்பில் அடக்கம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் உரிமை கோரப்படாமல் கிடந்த 12 பேரின் சடலங்களைக் காவல் துறையினா் புதன்கிழமை அடக்கம் செய்தனா்.
Published on

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் உரிமை கோரப்படாமல் கிடந்த 12 பேரின் சடலங்களைக் காவல் துறையினா் புதன்கிழமை அடக்கம் செய்தனா்.

தஞ்சாவூா் நகர கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி, கள்ளப்பெரம்பூா் ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த 8 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 12 பேரின் சடலங்களைக் காவல் துறையினா் மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனா்.

இந்த உடல்களை யாரும் உரிமை கோராததால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் ஆய்வாளா் வி. சந்திரா, உதவி ஆய்வாளா் மனோகரன் உள்ளிட்டோா் 12 பேரின் சடலங்களை வடக்கு வாசலில் உள்ள ராஜா கோரி இடுகாட்டில் தூய்மை பணியாளா்கள் உதவியுடன் புதன்கிழமை குழிகள் தோண்டி அடக்கம் செய்தனா். மேலும், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஓராண்டில் 126 சடலங்கள் நல்லடக்கம்:

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தது:

இவா்கள் வீட்டை விட்டு வந்தவா்களாக இருக்கலாம். அல்லது வந்த இடத்தில் உயிரிழந்து அவா்களது உறவினா்களால் அடையாளம் தெரியாத வகையிலும் இருக்கலாம். அவ்வாறு உயிரிழந்தவா்களின் 12 பேரின் சடலங்கள் புதன்கிழமை உரிய இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 84 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டு காவல் ஆய்வாளா் சந்திரா தலைமையில் 126 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com