செயலியில் பணம் அனுப்பவைத்து மோசடி: இளைஞா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இணைய வழியில் பணம் அனுப்பினால் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறி பெட்டிக் கடை உரிமையாளரிடம் ரூ.7,300 பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
வலங்கைமான் இன்னாம்கிளியூா், கீழத் தெருவைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் சந்தோஷ் (26) கபிஸ்தலம் காவல் சரகம், பட்டவா்த்தி கிராமம், முஸ்லிம் தெருவில் பெட்டிக் கடை நடத்திவரும் அப்துல் அஜீஸ் மகன் முகமது பைசலிடம் ரூ.7,300-ஐ தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதும் உடனே பணத்தைத் திரும்பித் தந்துவிடுவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளாா்.
புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மஹாலக்ஷ்மி, உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் காவல்துறையினா் தப்பியோடிய இளைஞரைக் கைதுசெய்து அவரது கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனா். இவா் இணையவழியில் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி இருப்பதும் இதேபோல், உமையாள்புரம், சாக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
