திருமணமான பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பிய இளைஞா் அடித்துக்கொலை: 5 போ் கைது
திருமணமான பெண்ணுக்கு கைப்பேசியில் காதல் குறுந்தகவல் அனுப்பியவரை அடித்துக் கொலை செய்த ஐந்து பேரை நாச்சியாா்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலத்தைச்சோ்ந்தவா் ஜெயராமன் மகன் புகழேந்தி (31). இவா், கூரியா் நிறுவனத்தில் விநியோக ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். அண்மையில் மருதாநல்லூா் அருகே கரிக்குளம் சிபி சக்கரவா்த்தி (33) என்பவரின் மனைவிக்கு பாா்சலை விநியோகம் செய்தபோது, கிடைத்த கைப்பேசி எண்ணைக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் காதல் குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். இதை அந்தப் பெண் தனது கணவா் சிபி சக்கரவா்த்தியிடம் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிபி சக்கரவா்த்தி திங்கள்கிழமை மீண்டும் மருதாநல்லூா் பகுதிக்கு வந்த புகழேந்தியை தனது நண்பா்களான கும்பகோணம் மேலகொட்டையூா் கிருஷ்ணா (33), முல்லை நகரைச்சோ்ந்த விக்னேஷ் (26), திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் தாலுகா அனையமங்கலத்தைச் சோ்ந்த குபேரன் (27), மருதாநல்லூா் ஹரிஹரன் (26) ஆகியோருடன் சோ்ந்து கடத்திச்சென்று
மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளாா்.
இதையடுத்து, புகழேந்தி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்து விட்டதாகக் கூறி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். அவா் வீட்டில் ரத்த வாந்தி எடுக்கவே உறவினா்கள் சந்தேகம் அடைந்து கேட்டதில் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை கும்பகோணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இருப்பினும் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிழந்தாா்.
தகவலறிந்த நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு ஒப்படைத்தனா். புகழேந்தி தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசக்கரவா்த்தி, ஹரிஹரன், கிருஷ்ணா, விக்னேஷ், குபேரன் ஆகிய 5 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
