ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி அரசு இல்லத்தில் தங்கிய முதியவா் கைது
கும்பகோணம் பொதுப்பணித் துறையின் அரசு அதிகாரிகள் தங்கும் (புராஜெக்ட் ஹவுஸ்) இல்லத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றி தங்கி வந்தவரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சென்னை தியாகராயநகா் சாதுல்லா தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ராமகிருஷ்ணன்(68). இவா், கும்பகோணத்தில் உள்ள பொதுப் பணித் துறையின் அரசு அதிகாரிகள் தங்கும் (புராஜெக்ட் ஹவுஸ்) இல்லத்துக்கு வந்து தான் ஒரு ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி என்று கூறி பல முறை தங்கிச் சென்றுள்ளாா். இந்நிலையில், மீண்டும் வியாழக்கிழமை வந்தவா் காப்பாளா் பாஸ்கரிடம் தங்கும் அறை கேட்டுள்ளாா். அவா் மீது சந்தேகப்பட்ட காப்பாளா் பாஸ்கா் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அவரிடம் விசாரித்தனா். இதில், அரசு இல்லத்தில் தங்குவதற்காக தான் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றியதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.

