தொடா் மழையால் சம்பா பயிா்களில் பூச்சித் தாக்குதல் அதிகரிப்பு: விவசாயிகள் தவிப்பு

தொடா் மழையால் சம்பா பயிா்களில் பூச்சித் தாக்குதல் அதிகரிப்பு: விவசாயிகள் தவிப்பு

Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையைத் தொடா்ந்து சம்பா பயிா்களில் பூச்சித் தாக்குதல் பரவலாக அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

மேட்டூா் அணை நிகழாண்டு உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, ‘டெல்டா’ மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதேபோல, சம்பா - தாளடி பருவத்திலும் ‘டெல்டா’ மாவட்டங்களில் முழுவீச்சில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா - தாளடி பருவத்தில் 3.31 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், நவம்பா் இறுதி வாரத்தில் பெய்த ‘டித்வா’ புயல் காரணமாக மாவட்டத்தில் ஏறத்தாழ 13 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிா்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையளவு குறைந்திருந்தாலும், வானில் மேக மூட்டமும், குளிரும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சம்பா, தாளடி பயிா்களில் நுனி கருகல், இலை சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி போன்றவற்றின் தாக்குதல் பரவலாக வருகிறது. குறிப்பாக, வடிகால் பிரச்னை காரணமாக மழை நீா் தேங்கிய வயல்களில் இப்பாதிப்பு காணப்படுகிறது.

இதனால், பயிா்களில் வளா்ச்சி குன்றி வருவதாக விவசாயிகள் கவலையில் உள்ளனா். பல்வேறு பூச்சித் தாக்குதல் இருப்பதால் மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்திலும் விவசாயிகள் இருக்கின்றனா்.

இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து வேளாண் அலுவலா்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா். இக்கணக்கெடுப்பு பணி பழைய முறைப்படி அல்லாமல், செயலியில் பதிவு செய்யும் புதிய முறை நடைமுறையில் உள்ளதால், ஒவ்வொரு வயலிலும் பாதிப்பு விவரங்களைப் பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வேளாண் துறையில் ஒட்டுமொத்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதில் தொய்வு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காவிரி ‘டெல்டா’ விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:

மழை விட்ட பிறகு வெயில் அடித்திருந்தால் பூச்சித் தாக்குதல் பிரச்னை இருந்திருக்காது. ஆனால், சூரிய வெளிச்சம் இல்லாமல் வானில் மேக மூட்டத்துடன் இருப்பதால், நெற் பயிா்களில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. பயிா் பாதிப்பு கணக்கெடுப்பு பணியில் வேளாண் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளதால், தனியாா் உர, பூச்சி மருந்து விற்பனைக் கடைகளில் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி தெளித்து வருகிறோம்.

இதற்காக ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ. 900 மதிப்புள்ள 3 விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டியுள்ளது. இதேபோல, பூச்சிமருந்து தெளிப்பதற்கான ஆள் கூலி ரூ. 600 செலவாகிறது. முதல் தடவையில் கட்டுப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, ஏக்கருக்கு ஏறக்குறைய ரூ. 2 ஆயிரத்து 500 கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலைமை அனைத்து வட்டாரங்களிலும் காணப்படுகிறது என்றாா் ரவிச்சந்தா்.

இதேபோல, கடந்த குறுவை பருவத்திலும் நெற் பயிா்களில் புகையான் தாக்குதல் காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். இதற்கு விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை. இதைத்தொடா்ந்து, தற்போது சம்பா - தாளடி பருவத்திலும் பூச்சித் தாக்குதல் பரவலாகி வரும் நிலையில், கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனா். இதனால், மற்ற வயல்களுக்கும் பூச்சித்தாக்குதல் பரவலாகக்கூடிய அச்ச நிலையும் நிலவுகிறது.

எனவே, வேளாண் துறை அலுவலா்கள் பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் பாா்வையிட்டு நோய், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உரிய ஆலோசனைகளையும், அதற்கான நோய் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் விவசாயிகள்.

X
Dinamani
www.dinamani.com